RSS

a

a

பழுப்பு அரிசிப் புட்டு (Brown Rice Puttu)


பழுப்பு அரிசி என்பது தீட்டப்படாத அல்லது பளபளப்பு ஊட்டப்படாத அரிசி ஆகும். அதாவது உமி மட்டும் நீக்கப்பட்டு ஆனால் பளபளப்பு(polish) ஆக்கப்படாத அரிசி. கைகுத்தல் அரிசி. வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பைபர் (fiber) என்று சொல்லப்படும் நார்ச் சத்து நிறைந்தது.
நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட பின்பு அரிசி லேசான மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் பளபளப்பாக்குதல் (polishing) எனும் செயலின் மூலம் வெண்மை நிறமாக அரிசியை மாற்றுவர். ஆனால் இந்த பளபளப்பாக்குதல் செயலின் மூலம் அரிசியில் இருக்கும் வைட்டமின் ஈ, ரிபோப்பிளேவின், நியாசின், வைட்டமின் B6, தயமின், இரும்பு, மெக்னீசியம் ஆகிய சத்துக்களை நாம் இழந்து விடுகிறோம். ஆனால் பழுப்பு அரிசி பளபளப்பு ஊட்டப்படாதது என்பதால் இது எதையும் நாம் இழப்பதில்லை. இதுவே இந்த பழுப்பு அரிசியின் தனிச் சிறப்பு.


பழுப்பு அரிசியில் இருந்து புட்டு மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள, நான் ஏற்கனவே கூறிய புட்டு மாவு அல்லது புட்டுப் பொடி தயாரிக்கும் முறையை பின்பற்றிச் செய்யலாம். அல்லது இப்போது இந்திய மளிகைக் கடைகளில் (Indian stores) இந்த பழுப்பு அரிசிப் புட்டு மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை வாங்கியும் புட்டு எளிதில் செய்து கொள்ளலாம். புட்டு தயாரிக்க …

தேவையான பொருட்கள்:


  • பழுப்பு அரிசிப் புட்டு மாவு – 1 கப்
  • தண்ணீர் – சிறிது
  • உப்பு – 1 சிட்டிகை
  • சர்க்கரை – தேவையான அளவு
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – சிறிது

செய்முறை:

1. தேவையான அளவு புட்டு மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். மாவில் சிட்டிகை அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.
2. மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாமல் பிசறி விடவும்.மாவில் ஓரளவு ஈரப்பதம் தெரியும் நிலையில் தண்ணீர் சேர்ப்பதை நிறுத்தி விடவும். மாவு உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
புட்டு தயாரிக்கையில் மாவில் சரியான அளவு தண்ணீர் சேர்த்து இருக்கிறோமா? என்பதைக் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
மாவில் உள்ள ஈரப்பதம் சரியான அளவில் உள்ளதா என்பதை அறியும் எளிய முறை:
மாவை கை நிறைய அள்ளி உள்ளங்கையில் இறுக கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடிக்க, மாவு உதிராமல் நிற்கும். இந்த அளவிற்கான ஈரப்பதம் புட்டு வேக சரியாக இருக்கும்.
இட்லி செய்ய பயன்படுத்தும் இட்லி குக்கர் மற்றும் இட்லி தட்டுக்களை வைத்தோ அல்லது ஸ்டீமரைப் பயன்படுத்தியோ புட்டு எளிதில் செய்து விடலாம். நான் இட்லி தட்டுக்களை பயன்படுத்திச் செய்வது வழக்கம். அம்முறைப்படி..
3. இட்லிக்கு செய்வது போலவே, குக்கரில் சிறிது தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. இட்லித் தட்டில் உள்ள குழிகளில், தண்ணீர் விட்டுப் பிசறிய புட்டு மாவை உதிரியாக உதிர்த்து நிரப்பவும்.
5. பின் இதனை குக்கரில் கொதிக்கும் தண்ணீரின் மீது வைத்து, மூடியிட்டு ஆவியில் வேக விடவும்.
6. பத்து நிமிடங்கள் கழித்து வெந்ததும், இட்லித் தட்டில் இருக்கும் புட்டை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
7. புட்டை லேசாக ஆறவிட்டு, கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது சர்க்கரை, நெய், சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.
நெய் மணக்கும் சுவையான இந்த இனிப்புப் புட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். சத்தானதும் கூட. ட்ரை பண்ணிப் பாருங்களேன்.
குறிப்பு:
  • புட்டில் நெய், சர்க்கரை, தேங்காய்த் துருவல் – அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவு சேர்த்துக் கொள்ளவும்.
  • மாவில் அதிக அளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து விட்டால், மாவு கட்டிகளாக திரண்டு கொள்ளும். உதிரியான புட்டு கிடைக்காது.
  • காலை நேர டிபனாக அல்லது மாலை நேர ஸ்நாக்காக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • புட்டுடன் வாழைப் பழம் விருப்பமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment